டெங்குக் காய்ச்சல்
டெங்குக் காய்ச்சல் (Dengue fever) என்ற டெங்கி காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.
நோய்க் காரணி
தீநுண்மவியல்
டெங்குக் காய்ச்சலின் நோய்க்காரணி ஒரு தீநுண்மம் (வைரசு) ஆகும். இது ஒரு ஆர்.என்.ஏ தீநுண்மம் ஆகும். இது மஞ்சட் தீநுண்மக் குடும்பம், மஞ்சள் தீநுண்மப் பேரினத்தைச் (இலங்கை வழக்கு: இனம்) சார்ந்தது. மஞ்சள் காய்ச்சல் தீநுண்மம், மேற்கு நைல் தீநுண்மம், யப்பானிய மூளையழற்சித் தீநுண்மம் போன்றனவும் மஞ்சள் தீநுண்மப் பேரினத்தில் அடங்குகின்றன. இவை நோய்க்காவிகளால் காவப்பட்டு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரப்பப்படுகின்றது. பெரும்பாலும் கணுக்காலிகளால்
(கொசுக்கள் அல்லது தெள்ளுகள்) காவப்படுகின்றன, எனவே கணுக்காலிகள் காவும்
தீநுண்மங்கள் எனும் ஆங்கிலப் பெயரைச் சுருக்கியதன் மூலம் உருவான (arbo:
arthropod-borne viruses) ஆர்போ எனும் பெயர்கொண்டும் அழைக்கப்படுகின்றன.[3]
டெங்குத் தீநுண்மத்தின் மரபணுத்தொகை 11,000 நியூக்கிளியோட்டைடு அடிக்கூறுகளைக் கொண்டுள்ளது, இவை மூன்று வெவ்வேறு புரத மூலக்கூறுக்களை (C, prM, E) உருவாக்குவதில் மரபணுக்குறியாகப் பயன்படுகின்றன, இப்புரத மூலக்கூறுகளே தீநுண்மத் துகளை உருவாக்குகின்றன. ஏனைய ஏழு வகையான புரத மூலக்கூறுகள் (NS1, NS2a, NS2b, NS3, NS4a, NS4b, NS5) தொற்றுநோய்க்கு உட்பட்டவரின் உயிரணுக்களில் தீநுண்மத்தின் பெருக்கத்துக்குத் தேவைப்படுகின்றது.[4][5]
டெங்குத் தீநுண்மத்தின் இனத்தில் நான்குவகையான குருதிப்பாய (serotype) வகைகள் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) உள்ளன[6]. இந்த நான்கு வகையும் தனித்தனியே முழு அளவிலான நோயை ஏற்படுத்த வல்லன.[4] ஒரு குறிப்பிட்ட குருதிப்பாய வகையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் முழுவதும் அக்குருதிப்பாய வகையிலிருந்து நோயெதிர்ப்பு
கிடைக்கின்றது, ஏனைய மூன்று வகையில் இருந்தும் நோயெதிர்ப்பு உருவான
போதிலும் அவை குறுகிய காலத்துக்கே நீடிக்கின்றன. டெங்குத்
தீநுண்மத்திலிருந்து முற்றுமுழுதாக நோயெதிர்ப்பு உருவாக வேண்டுமெனின்
குறித்த நபர் ஒருவருக்கு இந்நான்கு குருதிப்பாய வகைத் தீநுண்மங்களும் நோயை
உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் இரண்டாம் முறை தொற்று ஏற்படுவது
நோயாளிக்கு மிகக் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். DENV-1 குருதிப்பாய
வகையால் தொற்று ஏற்பட்டு மீண்டும் DENV-2 அல்லது DENV-3 யால் தொற்று
ஏற்படல், DENV-3யால் முதலில் தொற்று ஏற்பட்டு பின்னர் DENV-2யால் ஏற்படல்
போன்றவற்றில் கடுமையான விளைவுகள் ஏற்படும்.[2][6][7]
நோய்க்காவி
ஏடிசு எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு), குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது.
[6]
இக்கொசுவை இலகுவில் அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாகக் கருநிறக் காலில்
வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள் பொதுவாகப் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது.[8] டெங்குத் தீநுண்மம் காவும் வேறு ஏடிசு இனங்களாவன: A. albopictus, A. polynesiensis, A. scutellaris[6]
மனிதனே முதன்மை வழங்கியாக இருப்பினும்,[3][6] குரங்கினத்தின் இடையேயும் தீநுண்மங்கள் சுற்றி வருகின்றன.[9] ஒரு தரம் கொசு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும்.[10] நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை இக்கொசு கடிக்குமாயின் தீநுண்மங்கள் பரவக்கூடும். இதைவிட, பெண் கொசு தனது குருதி
உணவை நோய் தொற்றியுள்ளவரிடமிருந்து பெற்ற பின்னர், கொசுவின் குடற்கலங்களை
தீநுண்மங்கள் அடைகின்றன. 8 – 10 நாட்கள் கழிந்து கொசுவின் ஏனைய
இழையங்களுக்குத் தீநுண்மங்கள் பரவுகின்றன, இவ்வகையில் உமிழ்நீர்ச்
சுரப்பியையும் அவை சென்றடைகின்றன. நோயில்லாத ஒருவரை இக்கொசுக்கள்
கடிக்கும்போது தீநுண்மங்கள் செறிந்த தமது உமிழ்நீரை அவருக்குள்
செலுத்துகின்றன, இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே
கொசுவானது உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க்காவியாகத் தொழிற்படுகின்றது.[11]
இத்தீநுண்மங்கள் கொசுவுக்குக் கேடுதரும் விளைவுகள் ஏற்படுத்துவதில்லை,
இவை கொசுவின் ஆயுட்காலம் ( பொதுவாக 21 நாட்கள்) முழுவதிலும் தொற்றி
இருக்கின்றன.[11] மனிதனுக்கு அருகாமையில் உள்ள செயற்கையான நீர்நிலைத் தேக்கங்களில் முட்டை இடுவதை ஏடிசு எகிப்திக் கொசுக்கள் விரும்புகின்றன, எனவே தமது குருதி உணவுஉணவைப் பெற்றுக்கொள்ள முடியும்.[12]
குருதி மாற்றீடு, உறுப்பு மாற்றீடு (Organ transplantation) போன்ற சந்தர்ப்பங்களிலும் நோய்த் தொற்றுள்ள குருதி மூலம் டெங்குத் தீநுண்மங்கள் பரவுகின்றன.[13][14]கர்ப்பிணித்
தாயிலிருந்து சேய்க்கும் அல்லது பிறப்பின்போதும் பரவிய நிகழ்வுகள்
அறியப்பட்டுள்ளன. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம்
பெரும்பாலும் பரவுவதில்லை, எனினும் வழமைக்கு மாறாக அத்தகைய நிகழ்வுகளும்
அவதானிக்கப்பட்டுள்ளன.[11]
எளிதில் பாதிப்படைபவர்
குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது.[15]ஆண்களைக் காட்டிலும் கூடுதலாகப் பெண்கள் பாதிப்படைகின்றனர்.[5] நீரிழிவு, ஈழை நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய பாதிப்பை உண்டாக்கும்.[5]
நோயின் அறி உணர்குறிகள்
முதன்முதலில் நோயின் தொற்றுக்குள்ளானவர் பெரும்பாலும் ( 50 – 90%) அறி உணர்குறிகளின்றிக் காணப்படுவர், அல்லது கேடில்லாத காய்ச்சல் மட்டுமே இருக்கும்,[1][6][17] ஏனையோர் டெங்குவின் மரபார்ந்த அறிகுறிகளைக் கொண்டிருப்பர், அவையாவன: திடீரென அதிகரித்துச் செல்லும் மிகையான காய்ச்சல், தலைவலி, கண் பின்பகுதி வலி, உடல்வலி (தசை, எலும்பு வலி), களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், சுவையில் மாற்றம், தோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல். இவர்களுள் சிறிய பகுதியினர் (5%) நோய் கடுமையாகிக் காணப்படுவர்.[1][17] ஏற்கனவே ஒரு குருதிப்பாய வகை தீநுண்மத்தால் பாதிப்புற்ற சிறிய வீதமான மக்களில் மீண்டும் பிறிதொரு குருதிப்பாய வகைத் தொற்று ஏற்படின் குருதிக்குழாய்களில் சிதைவு ஏற்பட்டு குருதிப்போக்கு உண்டாகும் தீவிளைவு உண்டு, இத்தகைய நிலைமை டெங்குக் குருதிப்போக்குக் காய்ச்சல் எனப்படும்.நோயரும்பு காலம் (கொசு தீநுண்மத்தை செலுத்தியதிலிருந்து அறிகுறிகள் தோன்றும் காலம்) 3 – 14 நாட்களாகும், சராசரியாக 4 – 7 நாட்கள். எனவே அயனமண்டலப் பகுதிகளிலிருந்து வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்பவர், அங்கு வருகை தந்து 14 – 16 நாட்களுக்கும் மேற்பட்டால் டெங்குக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பில்லை.[15] அதேவேளையில் அக்குறிப்பிட்ட காலப்பகுதியில் அறிகுறிகள் தென்படின் டெங்குக் காய்ச்சலாக இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியது முக்கியமானது.
எச்சரிக்கைக் குறிகள்
வயிற்று வலி | ||||
வாந்தி எடுத்துக் கொண்டிருத்தல் | ||||
கல்லீரல் வீக்கம் | ||||
மென்சவ்வுக் குருதிப்போக்கு (மூக்கு, வாய்) | ||||
உயர் சிவப்பணுக் கனவளவு வீதம், தாழ் குருதிச் சிறுதட்டுகள் | ||||
சோர்வு |
பண்டுவ (மருத்துவ) முறை
நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க உதவும். மருத்துவமனையில் செய்யும் சிரைமூல நீர்ம ஈடு, குருதிப்பரிமாற்றம் போன்றவை நோயைக் கட்டுப்படுத்துகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கலாமா இல்லையா என்பது ‘எச்சரிக்கைக் குறிகளை’ வைத்துத் தீர்மானிக்கப்படுகின்றது.காய்ச்சலுக்கு பரசிட்டமோல் பயன்படுத்தப்படுகின்றது. அஸ்பிரின், இயக்க ஊக்கி மருந்துகள் (corticosteroids), அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு இல்லாத மருந்துகள் அறவே பயன்படுத்தல் கூடாது, ஏனெனில் இவை குருதிப்போக்கை மேலும் மிகையாக்கிவிடும். மேலும் தசை வழியே ஊசி போடுதல் போன்ற குருதிப்பெருக்கை ஏற்படுத்தவல்ல மருத்துவ முறைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.[11]
நோயின் மீள் நிலைப் பருவத்தில் சிரைவழியான நீர்மம் செலுத்துதல் நிறுத்தல் அவசியமாகின்றது, ஏனெனில் இப்பருவத்தில் நீர்ம அதிகரிப்பு நிலை உண்டாகும்.
சித்த மருத்துவம்
பாதிக்கப்பட்ட நோயாளி நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை காலை, மாலை ஆகிய இரண்டு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கபடுவதாகச் சித்த மருத்துவம் கூறுகின்றது.தடுப்பு முறைகள்
கொசு (ஏடிசு) உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது.[8] சுற்றுப்புறத்தில் தேங்கு நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மாந்தருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச்சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.
No comments:
Post a Comment